இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அதிரடி துடுப்பாட்டம்: 216 ஓட்டங்கள் இமாலய வெற்றியிலக்கு நிர்ணயம்
இலங்கை அணிக்கு எதிரான 2வது ரி-20 போட்டியில் மாஸ் சதாகட்டின் அதிரடி 96 ஓட்டங்கள் உதவியுடன் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 215 ஓட்டங்களைக் குவித்து வலுவான வெற்றியிலக்கை நிர்ணயித்துள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி-20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 215 ஓட்டங்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் அதிரடியாக ஆடிய மாஸ் சதாகட் அதிகபட்சமாக 96 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து அணியின் வலுவான ஓட்ட எண்ணிக்கைக்கு அடித்தளமிட்டார்.
இதனைத் தொடர்ந்து 216 என்ற கடினமான வெற்றியிலக்கை நோக்கி இலங்கை அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.
இன்றைய போட்டிக்கான இலங்கை அணியில் மூன்று மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சினேத் ஜயவர்தன, சமிந்து விக்ரமசிங்க மற்றும் நுவன் துஷார ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், முதலாவது போட்டியில் விளையாடிய கமில் மிஷார, துனித் வெல்லாலகே மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். மறுபுறம் பாகிஸ்தான் அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், ரசௌல்லாவுக்குப் பதிலாக சல்மான் மிர்சா களமிறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.